Home » பொதுவானவை » இணையத்தை காக்க குரல் கொடுங்கள்
இணையத்தை காக்க குரல் கொடுங்கள்

இணையத்தை காக்க குரல் கொடுங்கள்

இணையம் பழகாமல் இருந்த நாம், இணையத்தை பழகி விட்டோம். இனி அதை விட்டொழிக்க முடியாது. பேஸ்புக், ட்விட்டர், கூகிள் என ஜாலியாக வலம் வந்த நமக்கு இனிமேல் இவையெல்லாம் சுதந்தரமாக கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறி ?  

கடந்த சில தினங்களாக இணையத்தில் நீங்கள் உற்று நோக்கியிருந்தால்,  #saveinternet #netneutrality  போன்ற ஹாஸ்டாகுகள் பிரபலமாகி வருவதை கவனித்திருக்கலாம்.  ஏர்டெல் எந்த நாளில்  ஏர்டெல் ஜீரோ  என்ற புதிய வலையுலக சேவையை அறிவித்ததோ அன்றே சூடு பிடித்தது தான் மேலே சொன்ன ஹாஸ்டாகுகள்.

ஏர்டெல் ஜீரோ

ஏர்டெல் ஜீரோ  என்பது, இரு நிறுவனங்களின் பரஸ்பர ஒப்பந்தத்தின் படி, வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டம். அதாவது பணம் படைத்த ஒரு பெரிய நிறுவனம்,  ஏர்டெல் நிறுவனத்தை அணுகி, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தளத்தை இலவசமாக பார்க்க வழிவகை  செய்துகொடுக்க கேட்டுக்கொள்ளும்.  அதன்பேரில், ஏர்டெல் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு அந்த குறிப்பிட்ட தளம் எப்போதும் இலவசமாக பயன்படுத்த ஏர்டெல் நிறுவனம் அனுமதியளிக்கும். இதற்காக ஆகும் செலவை அந்த குறிப்பிட்ட பெரிய நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இதனால் நம் போன்ற வாடிக்கையாளர்கள் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது கேட்க நல்ல திட்டம் போல் தோன்றினாலும் , இது இணையத்தை ஜீரோ ஆக்கும் திட்டம் ! 

பணம் கொடுக்கும் நிறுவனத்தின் செயலிகளையும், தளங்களையும் மட்டும் முன் நிறுத்தி, மற்றவைகளை பின்னுக்கு தள்ளுகிற போக்கு இதில் எழலாம். ஒரு குறிப்பிட்ட இணையதளமோ, அல்லது செயலியோ இந்த இன்டர்நெட் வழங்குனர்களோடு சேராமல் போனால், அவர்களை பழிவாங்கும் நோக்கில், அந்த இணையதளத்தின் இணைய வேகத்தை இவர்களால் கட்டுப்படுத்த முடியும். அதற்க்கு பதில் இவர்களுக்கு கப்பம் கட்டும் மற்றொரு இணையதளத்திற்கு உங்களை செல்லும் படி பரிந்துரைப்பர்.  இதனால், கொஞ்ச நாட்கள் கழித்து, நீங்களும் உங்கள் கொள்கையை விட்டுகொடுத்து விட்டு இன்டர்நெட் வழங்குனர் பரிந்துரைக்கும் தளத்திற்கே செல்ல நேரிடும் .

இந்த தவறான முறைமை நிச்சயமாக, நமது, இணைய சுதந்திரத்தை  பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இணையத்தை இந்த, மரண பிடியில் இருந்து காப்பாற்ற, சமுக ஆர்வலர்கள் பலரும், #saveinternet #netneutrality என்ற பெயரில் குரல் கொடுத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களும் இதற்க்கு அதரவு தெரிவித்து சமுகவலை தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். இலவசம் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் கொடுக்கும் பணத்திற்கு இணையத்தை எங்களுக்கு சமமாக கொடுங்கள்.

இணைய நடுநிலை பற்றி  டிராய்க்கு, இது வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான புகார் மின்னஞ்சல்கள் அனுப்பபட்டுள்ளன.

நீங்களும் புகார் மின்னஞ்சல் அனுப்ப இந்த தளம் சென்று மின்னஞ்சல் அனுப்பும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். புகார்களை அனுப்ப ஏப்ரல் 24 கடைசி தேதி.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.