Home » பொதுவானவை » நீ மறையவில்லை !
நீ மறையவில்லை !

நீ மறையவில்லை !

நேற்றிரவு சரியான தூக்கம் இல்லை. ஏதோ ஒன்றை தொலைத்தது போன்ற உணர்வு. ஆனால் மனம் அவ்வபோது சமதானம் சொல்கிறது அவர் எங்கேயும் செல்லவில்லை ஒவ்வொரு இளைஞர்கள் மனதிலும் ஆழமாக குடி கொண்டுள்ளார் என்று. 

2008 -ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன், அப்போது எனதருகில் ஒரு புத்தகம்.  அக்னி சிறகுகள் என்ற பெயரில் உள்ளுக்குள் அக்கினியை வைத்துக்கொண்டு, கொஞ்சமும் சலனம் இல்லாத முகத்தை கொண்ட அட்டைப்படத்துடன்.

எடுத்து பார்த்தேன்.

எப்போது தொடங்கினேன் என்று தெரியவில்லை, கடைசியில் புத்தகத்தை முடிக்க மனமில்லை. நாம் இன்று படும் கஷ்டங்கள் ஏதுவும் பெரிதில்லை எல்லாம் நிச்சயம் ஒருநாள் மாறும் என்பதில் கலாமின் வாழ்கை ஒன்றே போதும். அவர் ஒரு இடத்தில் ஒன்றை அருமையாக சொல்லியிருப்பார். மேற்படிப்பிற்கு எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்த பிறகு கல்லூரிக்கு பணம் செலுத்த எனது அக்கா தனது கைகளில் கிடந்த தங்க வளையல்களை கழட்டி கொடுத்துதான் என்னை படிக்க அனுப்பினார்.

இந்த இடத்தில் ஏனோ தெரியவில்லை. மனம் கலங்குகிறது. விழி வெள்ளம் பெருகுகிறது. கொஞ்சம் ஒத்து பார்க்கும் போது இந்த சம்பவங்கள் என் வாழ்விலும் நடந்தேரியதுண்டு. அங்கு அக்கா. இங்கு அம்மா. அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த புத்தகத்தை படித்த முடித்த போது, இதுவரை என்னுள் இருந்த இரண்டு விஷயங்கள் தெளிவு பெற்றது.

1. ஒன்று எளிமை- வாழ்க்கையில் எந்த நிலைக்கு சென்றாலும் எளிமை மறத்தல் கூடாது.

2. மற்றொன்று வாழ்ந்தால் ஏதாவது செய்துவிட்டு போகவேண்டும், ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

மாபெரும்  அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டின் ஒருமுறை காந்தியை பற்றி சொன்னாரம், இதுபோன்ற மனிதர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் எதிர்காலத்தில் உலகம் நம்புமா ? என்று. அதுபோல கலாமை போன்ற மாமனிதர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் நிச்சயம் இந்த உலகம் ஒரு நிமிடம் நம்ப தாமதிக்கும்.

வாழ்நாளில் தனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கற்பித்தலை எல்லா இடங்களிலும் சொல்லும் கலாம், மாணவர்களுக்கு கற்பிக்கும் போதே நம்மை விட்டு பிரிந்தது நிச்சயம் வரலாற்றில் ஒரு தனித்துவமான  இறப்பாகவே இருக்கும்.

உலக நாடுகள் பலவும் நம்மை விண்வெளி துறையில் நிமிர்ந்து பார்க்கச் செய்த நமது ராமேஸ்வரத்து தங்கத்தின் வாழ்நாளில் நாம் வாழ்ந்ததே பெரிய பாக்கியம்.

உனக்காக ஒரு கவிதை

உன்னை நேரில் பார்த்ததில்லை

ஆனால் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது

உன்னிடம் நேரில் பேசியது இல்லை

ஆனால் பேச வேண்டும் போல் இருக்கிறது

ஆனால் என்னை நீ நேரில் பார்க்காமலும், பேசாமலும் எனக்காக, எங்களுக்காக எவ்வளோ செய்திருக்கிறாய்.

நீ என்னிடம் கேட்ட ஒன்றை நான் தராமல் இருப்பேனா ? 

நிச்சயம் என் பங்கோடு இந்தியா வல்லரசு ஆகும் 2020-  ல்

– சாதிக்க துடிக்கும் இந்திய இளைஞர்களில் ஒருவன்     

#APJ Abdulkalam

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.