Home » கணினி » இணைய உலகில் ஒரு மன்னிப்பு
இணைய உலகில் ஒரு மன்னிப்பு

இணைய உலகில் ஒரு மன்னிப்பு

1994 -இன்டர்நெட் துவங்கியிருந்த காலம். இது எதிர்காலத்தில் உலகை வியக்க வைக்கப்போகும் தொழில்நுட்பம் என்று ஒரு சிலரே அறிந்திருந்தனர். அதில் ஏதன் ஜக்கர்மேனும் ஒருவர். அந்த நேரத்தில் நெட்ஸ்கேப், ஆல்டாவிஸ்டா, ஜியோசிட்டி போன்ற நிறுவனங்கள் இன்டர்நெட் உலகை ஆண்டு வந்தன.

இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி (How to use Internet) என்ற நூல் வெளியாகி விற்பனையில்  சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த காலம் அது.   

தற்போது உள்ளது போல உடனடியாக எந்த ஒரு அடிப்படை கணினி அறிவும் இல்லாமல் எந்த ஒரு பயனாளியும் தனக்கென ஒரு வெப்சைட் செய்துக்கொள்ளும் அளவிற்கான இணையதளம் அப்போது இல்லை. அதனால் ட்ரைபாட் (Tripod) என்னும் நிறுவனம் அது போன்ற ஒரு இணையதளத்தை நிறுவ விரும்பியது. அந்த பொறுப்பை நமது கதையின் நாயகன் ஏதன் ஜக்கர்மேனிடம் கொடுத்தது.

ஜக்கர்மேனும் இந்த இணையதளத்தை சிறப்பாக செய்து முடித்தார். ட்ரைபாட் நிறுவனம் எதிர்பார்த்தது போலவே மக்கள் கூட்டமும் தங்களுக்கென இலவசமாக இணையதளம் செய்துக்கொள்ள இந்த வெப்சைட்டை நோக்கி படை எடுத்தார்கள். தொடக்கத்தில் மகிழ்ச்சியடைந்த ட்ரைபாட் ஒரு அளவிற்கு மேல் மக்கள் கூட்டம் தங்கள் தளத்திற்கு வருவதை எண்ணி வருந்தியது.

அந்த வருத்தத்திற்கு காரணம், மக்கள் அதிகமாக வந்தாலும், இந்த தளத்தை கொண்டு வருமானம் ஈட்ட முடிய வில்லையே. வருமானம் இல்லாமல் இந்த தளத்தை நடத்தி சென்றாலும், அடிப்படையாக இந்த இணையதளம் இயங்க தேவையான சர்வர் உள்ளிட்ட செலவுகளை எப்படி ஈடு செய்வது.

அதற்கு ஒரே வழி விளம்பரம் போடுவது.

இது குறித்து, ஏதன் ஜக்கர்மேனிடம் கூறியபோது, இன்டர்நெட் உலகில் அவர் செய்யப்போகும் காரியம் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்க போகிறது என்பதை அவர் கொஞ்சமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வருமானம் ஈட்ட வேண்டும் அதுவே நம்முடைய இலக்கு என்பதை புரிந்து கொண்டு தனது கணினி முன்பு அமர்ந்த ஏதன் பாப் பப் (POP UP) என்று கூறப்படும் ஒருவகை செயல்பாடினை கண்டறிந்தார்.

Pop up Ads

இன்று நீங்கள் சில தளங்களில் படங்கள் டவுன்லோட் செய்ய சென்று, தளத்தில் நீங்கள் எங்கே மௌசை வைத்து கிளிக் செய்தாலும், தானாகவே சில விளம்பரங்கள் திறக்குமே அதைதான் அன்று எளிய வகையில் ஏதன் ஜக்கர்மேன் கண்டறிந்திருந்தார்.

அதன்படி ட்ரைபாட் நிறுவனத்தின் இணையதளத்திற்கு ஒரு பயனாளி வந்து கிளிக் செய்தவுடன் தானாகவே ஒரு விளம்பரம் திறந்துக்கொள்ளும். மற்றவர்களின் விளம்பரங்களை காட்டியதின் மூலம் இந்நிறுவனம் தனது செலவுகளை ஈடு செய்துக்கொண்டது  என்றாலும், இது இன்டர்நெட் உலகில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது .

துவக்கத்தில் அவர் அன்று உருவாக்கிய பாப் பப்-க்கள் அவ்வளவு பயங்கரம் வாய்ந்ததில்லை. அது வருமானம் ஈட்ட வெறும் விளம்பரம் மட்டுமே காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. உங்களுக்கு தேவையில்லை என்று நினைத்தால் சுலபமாக க்ளோஸ் செய்துவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பார்க்கலாம்.

ஆனால் இன்று உள்ள பாப் பப்-க்கள் அப்படியில்லை.

கணினிகளில்  பெருமளவு வைரஸ் பாதிப்பு ஏற்பட இந்த பாப் பப்-க்கள் முக்கிய காரணமாக உள்ளன. இதனால் கணினி பாதிப்படைந்து தேவையில்லாத சிக்கலுக்குள் ஆளாக நேரிடுகிறது. அதிலும் இந்த வகை   பாப் பப்-க்களை நீங்கள் மூட நினைத்தாலும் எளிதில் மூட முடியாத படி செயல்படுகின்றது.

“உங்களுக்கு ஐந்து கோடி பரிசு விழுந்துள்ளது” என்பதில் துவங்கி உங்க “டூத் பேஸ்ட்-தில் உப்பு இருக்கா” என்பது வரை இந்த பாப் பப்-க்களில் விளம்பரங்களாக உலாவ விடப்பட்டுள்ளது. சொல்லப் போனால் இதனால் பலருக்கு மன உளைச்சலே வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்படி தான் என்றோ ஒரு இணையதளத்தை காப்பாற்ற செய்த ஒரு முயற்சி இன்று இணையத்தையே விழுங்கிவிடும் அளவிற்கு வளர்ந்து விட்டதை எண்ணி வருந்திய ஜக்கர்மேன், கடந்த 2014 ஆம் இணைய உலகிற்கு “என்னுடைய மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதனை கேட்டு இணைய உலகம் பரபரப்பாக பேசிக்கொண்டது. காலங்கள் பல கடந்தாலும் நான் செய்தது தவறு என்பதை ஒத்துக்கொள்ள ஒரு மனம் வேண்டும் என்பதை ஜக்கர்மேன் நம் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார்.

அதனால் இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் எதோ ஒரு வழியில் யாரையோ பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

ஜக்கர்மேன் பற்றிய விக்கி பக்கம்: https://en.wikipedia.org/wiki/Ethan_Zuckerman

ட்ரைபாட் இணையதளம்: http://www.tripod.lycos.com/

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.