எப்போதுமே சினிமாவுக்கு நேரடி எதிரி என்றால், அது திருட்டு விசிடி தான். படம் திரைக்கு வந்த சில நாட்களிலேயே எல்லோருக்கும் திருட்டு விசிடி கிடைத்துவிடும் அளவுக்கு ஒரு மறைமுக சந்தை படுவேகமாக இயங்கி வருகிறது என்று சொல்லலாம்.
நாமும் சினிமா அரங்கிற்கு செல்ல நேரமின்மை, அதிகப்படியான டிக்கெட் விலை என்றெல்லாம் காரணம் காட்டி, திருட்டு விசிடி-க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு, இந்த திரைப்படத்தை அவசியம் நீங்கள் பார்க்க வேண்டும், என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். உடனே அவரிடம் இருந்து இப்படி பதில் வந்தது.
சார் தமிழ் ராக்கர்ஸ் ல இந்த படம் இருக்கா?
பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது? ஆக படம் பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கம் பக்கம் போக வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் துளியும் இல்லாமல் போய் விட்டது.
இருப்பினும் திரைத்துறையினர், திருட்டு விசிடி, ஆன்லைன் தளங்களை முழுவதுமாக ஒழித்துக்கட்ட எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் முழுவதுமாக வெற்றிக்காணுமா என்பதில் பெருத்த சந்தேகமே மிஞ்சுகிறது.
சரி இப்போது முக்கிய விஷயத்திற்கு வருவோம். தற்போது புதிதாக சினிமாவுக்கு வில்லனாக களத்தில் இறங்கியிருப்பது “பேஸ்புக் லைவ்”. அதென்ன பேஸ்புக் லைவ்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது நீங்கள் விரும்பிய நிகழ்வுகளை நேரடியாக (லைவாக) பேஸ்புக்கில் ஒளிபரப்பும் வசதிதான் அது.
இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் சினிமா நட்சத்திரங்களின் பேட்டி, முக்கிய விழாக்கள் போன்றவற்றை பலர் ஒளிபரப்பி மகிழ்ந்தனர் என்பது சிலருக்கு தெரிந்திருக்கக்கூடும். தற்போது இந்த வசதியைத்தான் நம்மாட்கள் கையில் வைத்துக்கொண்டு புதுப்படங்களை எல்லாம் சப்டைட்டிலோடு பேஸ்புக் லைவில் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளார்கள்.
தீபாவளிக்கு வந்த திரைப்படங்கள் கூட ஒலிபரப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படியே போனால், தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே படுத்துவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தீர்வுதான் என்ன ?
இணையம் கைக்குள் அடக்கமுடியாத அளவிற்கு வளர்ந்துக்கொண்டே போகின்றது. காவல்துறையால்தான் இதற்கு சரியான தீர்வு கொண்டுவர முடியும் என்று சில இணையதளங்களில் எழுதியதை பார்த்தேன்.
ஒருவேளை துபாயில் இருந்துக்கொண்டு யாரோ ஒருவர் இணையம் மூலம், பேஸ்புக் லைவில் புதிதாக திரைக்கு வந்த தமிழ் படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தால், தமிழகத்தில் இருந்துகொண்டு அவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அல்லது எப்படி நாம் கைது செய்வது?. இதற்காக போலீசார் துபாய்க்கு அவ்வபோது சென்று வர முடியுமா?. இப்படி ஏகப்பட்ட கேள்விகள் நீண்டுக்கொண்டே சென்றாலும், சினிமாவினையும் அதை மட்டுமே நம்பி பிழைக்கும் குடும்பங்களும் காக்கப்பட வேண்டியவை.
இந்த கட்டுரைக்கு நண்பர்கள் மத்தியில் கிடைத்த சில விமர்சனங்களை கொண்டு தமிழ் சினிமா மீட்க இதை செய்யலாம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முடிந்தால் படித்து பாருங்கள்.
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017