Home » கணினி » டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்
டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்

டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்

பழங்காலத்தில் மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், கலாச்சாரம், தேசம் அற்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போதுதான், வேட்டையாடுதல், மண் பாண்டம் செய்தல், நெருப்பு உருவாக்குதல் போன்ற கலைகளை மனிதன் மெல்ல கற்று தேர்ந்தான்.

அதன் பின்பு ஒரே இடத்தில் இருக்க மறுத்து, பல புதிய இடங்களை கண்டுபிடிக்க ஆட்டு மந்தையை போல கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து, சந்ததிகளை உருவாக்கி, தேசம், ஜாதி, மதம், விஞ்ஞானம் என்று இன்று வளர்ந்து நிற்கின்றோம்.

விஞ்ஞானம் என்று சொல்லும் போது அதில் எவ்வளவோ இருப்பினும், இன்டர்நெட் பற்றி இந்த கட்டுரையில் பேச போகின்றோம்.

இன்டர்நெட் 

இன்டர்நெட் என்றால் என்ன? அது எங்கே பிறக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது? எப்படி ஒரு தேசம் விட்டு, இன்னொரு தேசம் பாய்கிறது என்று யாரவது என்றாவது யோசித்தது உண்டா?

பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூட இந்த கேள்விகளுக்கான விடைகள் தெரியாமல் இருக்கலாம். தெரியாவிட்டால் அதை பற்றி கவலை ஏதுமில்லை. இருப்பினும் ஒன்றை மட்டும் நீங்கள் நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

எட்வர்ட் ஸ்நொடன்

எப்போது முதன்முதலாக உங்களது ஸ்மார்ட் போன் அல்லது கணினியை இன்டர்நெட் வுடன் இணைத்தீர்கள்களோ அன்றே உங்களது ரகசியங்கள் காற்றில் கசியத்தொடங்கிவிட்டன. 2013 ஆம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பின் கீழ் பணியாற்றிய எட்வர்ட் ஸ்நொடன் என்பவர் சில உண்மைகளை வெளியிட்டார். உலகமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் மூழ்கியது.

அவர், குறிப்பிட்டதில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.

இந்த உலகில் யாரை வேண்டுமானாலும், இண்டர்நெட்டை கொண்டு கண்காணிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒருவரது பெயரை குறிப்பிட்டால் போதும், குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் யார் யார் அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், கடைசியாக எங்கே சென்றார்கள் என்ற விபரங்களை நொடி பொழுதில் கண்டுபிடித்து விடலாம்.

உங்களது வீட்டில் கணினியோடு வெப் கேம் இணைக்கப்பட்டு இருந்தால் அதன் மூலம், உங்களது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை லைவாக  பார்க்க முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலே உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் படங்கள் மெசேஜ்கள் போன்றவற்றை எப்போது வேண்டுமானாலும் எங்களால் பார்க்க முடியும்.

மேற்ச்சொன்ன அனைத்தையும் இவர் வெளியிட்டமைக்காக ஸ்நொவ்டன் இன்று அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கிறார். தற்போது ரஷியாவில் இருப்பாதாக செய்திகள் மட்டும் அவ்வப்போது வெளிவந்துக்கொண்டிருக்கின்றது. இவரை பற்றி எதிர் வரும் தொடர்களில் பார்ப்போம்.

இது அனைத்தும் சாத்தியமா என்று யோசித்துப் பாருங்கள். அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று உங்களது மனதில் நினைப்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

என்றைக்கு நீங்கள் “I Agree” என்ற வார்த்தையை கிளிக் செய்கிறீர்களோ அன்றிலிருந்து நீங்கள் கண்காணிப்பு வட்டத்திற்குள் வந்துவிடுகிறீர்கள். சாதாரண ஆப் முதல் கணினி மென்பொருள் வரையில் இந்த “I Agree” அல்லது “I Accept” என்ற சொல்லை கடக்காமல் உள்ளே செல்ல முடியாது.

எல்லாம் ரகசியம், உங்களை தவிர உங்கள் தகவல்களை வேறு யாரும் பார்க்க முடியாது, பயன்படுத்த முடியாது என்பதெல்லாம் பொய். எப்போதும் உங்கள் தகவல்கள் அனைத்தும் யாரோ ஒருவரால் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

உங்கள் வீட்டில் உங்கள் கணினியை எத்தனை மணிக்கு ஆன் செய்தீர்கள் முதற்கொண்டு என்னென்ன வெப்சைட்களை அதிகம் பார்க்கிறீர்கள் என்பது வரை எல்லா தகவல்களும் சேகரிக்கப்படுகிறது.

உங்களின் புரிதலுக்காக ஒரு எடுத்துக்காட்டை கூறுகிறேன். உங்களுக்கு ஒரு நல்ல தையல் மெசின் தேவை, அதற்காக கூகிளில் சென்று “Sewing Machine reviews”  “Tailoring Machine price” போன்ற டைலரிங் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை கொண்டு தேடுவீர்கள். நீங்கள் தேடியதுக்கான விடைகளும் மலைப்போல உங்கள் முன் குவியும். நீங்கள் பார்க்க நினைக்கும் சில லிங்குகளை பார்த்துவிட்டு, அதன் பிறகு உங்கள் வேலையை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் தேடியது மட்டும், உங்களது ப்ரௌசரில் அப்படியே பதிந்து நிற்கும்.

அதன் பிறகு மீண்டும் உங்களது கணினியை திறந்து வேறு எதாவது வெப்சைட்களுக்கு சென்றால், தையல் மெசின் பற்றிய விளம்பரங்கள் உங்களது கண்ணில் நிறைய படும். இதற்கு பெயர்தான் “Retargeting”. நீங்கள் வாங்க விரும்பும் எண்ணத்தில்தான் இதையெல்லாம் பார்த்தீர்கள் என்பதை சரியாக கணித்து உங்களை வாங்க தூண்டவே இந்த விளம்பரங்கள் எல்லாம். இதன் மூலம் உங்களது தேடுதல் எதுவும் ரகசியமாக காக்கப்படுவதில்லை என்பதை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள்.

கடந்த வருடம் கூட அமெரிக்க உளவு அமைப்பு ஆப்பிள் ஃபோனை எங்களால் ஹாக் செய்ய முடியும் என்று சொன்னதே! அது எப்படி சாத்தியம். ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ஃபோனை எப்படி இவர்கள் ஹாக் செய்கிறார்கள். இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள்.

அடுத்த வாரம் சிந்திப்போம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.