Home » பொதுவானவை » இந்த தீபாவளிக்கு ஒரு தமிழ் டி ஷர்ட்
இந்த தீபாவளிக்கு ஒரு தமிழ் டி ஷர்ட்

இந்த தீபாவளிக்கு ஒரு தமிழ் டி ஷர்ட்

படிச்சு முடிச்சதும் லண்டன், அமெரிக்கா என்று பறக்கிற இந்த காலத்தில், தமிழ் நாட்டில் தமிழனுக்கு பிறந்தோம், பிறகு ஏன் ஓடவேண்டும் அயல்நாட்டுக்கு அடிமை மகனாய் என்று ஒரே குரலில் கேட்கின்றனர்.

ஆங்கில வாசகங்கள் பொறித்த டீ ஷர்ட்களுக்கு பதிலாக செம்மொழியாம், அழகிய தமிழ் மொழியில், வாசகங்கள் பதித்த தமிழ் டீ ஷர்ட்களை “இலவம் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். அவர்களின் நேரடி பேட்டி இதோ உங்களுக்காக!

இந்த இலவம், தமிழ் டீ ஷர்ட் யோசனை எப்படி?

இயந்திரவியல் பொறியாளரான கோபிநாத், பேச்சை துவக்கிறார், நான், யுவராஜ், லெனின் மூவரும் சென்னையில ஒரே கல்லூரியிலதான் படிச்சோம். படிப்பை முடிச்சதும், எங்களின் சோதனை கட்டம் ஆரம்பித்தது. எங்கு வேலை தேடியும், மனசுக்கு நிறைவு தரமாதிரி ஒரு வேலை கெடைக்கல, அப்படியே வேலைக்கு சென்று அடிமை வாழ்க்கை வாழ்வதைவிட சுயதொழில் செய்து வெற்றிபெறுவோம் என்ற நோக்கோடு, நாங்கள் மூவரும் ஒருநாள் பேசிக்கொண்டிருந்ததின் விளைவுதான் இந்த இலவம், தமிழ் டீ ஷர்ட்.

சரி. டீ ஷர்ட் என்றதும் ஆங்கில வாசகங்கள் அச்சிடப்பட்ட டீ ஷர்ட்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். உங்களுக்கு எப்படி இந்த தமிழ் டீ ஷர்ட் யோசனை ?

கேள்விக்கு கொஞ்சமும் நேரம் கொடுக்காமல் தொடர்கிறார் யுவராஜ், டீ ஷர்ட் தொழில்தான் செய்யபோகிறோம் என்றான பிறகு, அதில் என்ன புதுமை செய்யமுடியும் என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில், பெரும்பாலும் நம்மூர் இளவட்டங்கள் அணிந்திருக்கும் டீ ஷர்ட்களில் ஆங்கில வார்த்தைகளும், சில வேளைகளில் வக்கிரமான வார்த்தைகளும் அச்சிடப்பட்டுருப்பதை கண்டோம். அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது, ஏன் நம்ம தாய் மொழி தமிழ்லயே வார்த்தைகளை பதித்து டீ ஷர்ட் செய்தால் என்ன ?. நம் தாய் மொழியில் இல்லாத வார்த்தைகளா?, உலக ​மொழிகளிலே பழமை வாய்ந்த, மிக அழகிய மொழியாகிய செம்மொழியான தமிழ் மொழியின் மகன்களாக பிறந்துவிட்டு இதை செய்யாமல் இருந்தால் தமிழனாக
பிறந்த தடமே இல்லாமல் போய்விடும் என்பதால் இதை தொடங்கும்
​முயற்சியில் ​ஈடுபட்டோம்.

உங்களிடம் எனென்ன வகை டீ ஷர்ட்கள் கிடைக்கும் ?

நாங்கள் காலர், ரவுண்டு நெக், குழந்தைகளுக்கு ஏற்ற சிறிய வகை டீ ஷர்ட்களில் பாரதியார், வள்ளுவன்,விவேகானந்தர், பாரதிதாசன், பூங்குன்றனார், தொல்காப்பியர் ஆகியோரின் வாசகங்கள், அவர்களை பற்றி பெருமை படுத்தும் பல செய்திகளை தமிழில் பதித்து விற்பனை செய்கின்றோம். இந்த டீ ஷர்ட்கள் அனைத்தும் உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இணையதளத்தில் விற்பனை செய்கின்றோம். உங்களுக்கு ஏற்ற வண்ணம், அளவுகளில் ஆர்டர்செய்து இந்த டீ ஷர்ட்களை நீங்கள் பெற்றுகொள்ளலாம். தற்போது இந்தியா உள்பட சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் மட்டும் விற்பனை செய்கின்றோம், கூடியவிரைவில் இதை மற்ற நாடுகளுக்கும் எடுத்துசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுளோம்.

மக்களிடம் உங்க டீ ஷர்ட்களுக்கு எந்தளவு வரவேற்பு இருக்கிறது ?

எதிர்பார்த்ததுக்கு அதிகமாகவே இருக்கு. எங்கள் தமிழ் டீ ஷர்ட் பற்றி அறிந்து பல கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி விழாக்களுக்காக பல்க் ஆர்டர் முறையில் டீ ஷர்ட் வாங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இணையவழி விற்பனை என்பதால் இந்தியா மட்டுமில்லாமல் மற்ற பல நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

உங்களின் எதிர்கால லட்சியம் பற்றி ?

தமிழர்களை பெருமை படுத்தும் தமிழ் பேசும் ஆடைகளை தமிழ் நாட்டிலே தயாரித்து அதை உலகம் முழுக்க இருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். இதுவே எங்கள் இலவம், தமிழ் டீ ஷர்ட் நிறுவனத்தின் லட்சியம் என்று தமிழ் உணர்ச்சிப்பொங்க முடிக்கிறார் லெனின்.
உங்கள் லட்சியம் நிச்சயம் நிறைவேறும் என்ற வாழ்த்துக்களோடு, விடைபெறுகிறோம்.

இலவம், தமிழ் டீ ஷர்ட்கள் வாங்க இந்த தளத்திற்கு செல்லுங்கள்       

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.