Home » பொதுவானவை » பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

ராஜாவின் இசைகோர்ப்பில், வைரமுத்துவின் அழகிய வரிகளில் உருவான ” பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ” பாடல் ரொம்ப நாளைக்கு பிறகு நேற்று தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருந்தேன். 1983- ல் வெளியான “இன்று நீ நாளை நான்” திரைப்படம், மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்பதை சில காலத்திற்கு பின்தான் தெரிந்துகொண்டேன். விவகாரமான கதை பின்னலில் எல்லோரும் மிக நேர்த்தியாக நடித்திருப்பார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் லக்ஷ்மி பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு விதவைக்கு ஏற்படும் நிலையை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

சி.எ.பாலனின் “தூக்குமர நிழலில்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெய்ஷங்கர் வீட்டில் சிறு வயது முதல் வேலைக்காரனாய் இருக்கும் சிவகுமார், ஜெய்ஷங்கரின் மனைவியை ஒருகட்டம் வரைக்கும் எஜமானரின் மனைவியாக, அண்ணியாக கருதுவார். ஒரு காலகட்டத்தில் ஜெய்ஷங்கர் தேர்தலில் நின்று தோற்று, அதனால் குடித்து இறந்து விடுவார். கணவர் இறந்து தனிமையில் வாடும் லக்ஷ்மியின் பார்வை வேலைக்காரன் சிவகுமார் மீது விழும்.

இன்று நான் நாளை நீ

தன்னை ஒருநாள் சிவகுமாரிடம் வெளிபடுத்த துடிக்கும், லக்ஷ்மி ஒரு மழை நாளில், ஈர துணியில் நடனமாடி தன்  ஆசைகளை சிவகுமாரிடம் வெளிபடுத்துவார். அதிலிருந்து அண்ணி என்ற முறை போய், இருவருக்கும் தவறான உறவு முறை தொடங்கிவிடும்.

இந்த சமாச்சாரங்கள், சிவகுமாரின் மனைவி சுலோச்சனாவுக்கு தெரிந்து, அதனால் ஏற்படும் பிரச்சனையில் சுலோச்சனா இறக்க ,சுலோச்சனா சாவிற்கு காரணமாகி தூக்கு தண்டனை கைதியாகி விடுவார் சிவகுமார் .தண்டனைக்கு முதல் நாள் அவரைக்காண வரும் லட்சுமி, ஜெயிலிலேயே தற்கொலை செய்து கொள்வார். இப்படி படம் நிறைவடைகிறது.

படத்தில் லக்ஷ்மி தன் மனதாபங்களை சிவகுமாரிடம் வெளிப்படுத்தும் “பொன்வானம் பன்னீர் தூவுது இநேரம்” பாடலை இளையராஜா மிக அழகாக கோர்த்திருப்பார். ஜானகியின் குரல் ஓசையில், ஒரு விதவையின் எதிர்பார்ப்பு தெளிவாக புரியும்.

பாடல் துவங்கும் போது சில்லென்ற சாரல் காற்று உங்களை தீண்டிவிட்டு செல்வதைபோல் நீங்கள் உணரமுடியும். மறுநொடியில், ஜானகியின் ஆலாபனைகள் துவங்கும், “மழை செய்யும் கோளாறு… கொதிக்குதே பாலாறு…” என்ற வரியில் ஜானகி தன் குரலில் காட்டும் ஏக்கத்தை சொல்லுக்குள் அடக்கமுடியாது. இந்த பாடல் கேட்டதிலிருந்து வைரமுத்துவின் பாடல் வரிகளை கூர்ந்து கவனித்து வைரமுத்து மேல் பித்தனாய் போனேன். அவ்வளவு ஒரு அழகான அழமான வரிகள். இதற்க்கு மேலும் ஒரு விதவையின் ஏக்கத்தை வரிகளில் வெளிப்படுத்த முடியுமோ ??

கேட்டு பாருங்கள் ! உணரமுடியும்.

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்..
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..

மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு… கொதிக்குதே பாலாறு…
இது காதல் ஆசைக்கும் காமன் பூசைக்கும் நேரமா?
இந்த ஜோடிவண்டுகள் கூடு தாண்டிடுமா?

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

இந்த தாமரை மலர்ந்தபின்பு மூடுமோ?
பட்டு பூங்கொடி படர இடம் தேடுமோ?
மலர்க்கணை பாயாதோ… மதுக்குடம் சாயாதோ?
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா…
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா…

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்…
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…

 

– குணசீலன்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.