Home » பொதுவானவை » புத்தூர் ஜெயராமன் – சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்
புத்தூர் ஜெயராமன் – சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்

புத்தூர் ஜெயராமன் – சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்

நம்மூர்களில் படைக்கு பிந்தி போனாலும், உணவுக்கு முந்தி போ என்று சொல்வது வழக்கம். மனித குலம் தோன்றியது முதலே உணவே முதல் சிந்தனையாக தோன்றியதால் என்னவோ, இன்னும் அதிலிருந்து விடுபடாமல் உணவிற்கே ஒரு வித  அடிமையாக கிடக்கிறோம் என்று சொல்லலாம்.

எனது ஊர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, காரைக்கால் (அருகில்தான் சனிஸ்வர பகவான் திருநள்ளாரில் குடிக்கொண்டிருக்கிறார் -5 கீமீ ) , என்னிடம் நண்பர்கள் அவ்வப்போது புத்துர் ஜெயராமன் சாப்பாட்டு கடையை பற்றி விசாரிப்பது வழக்கம். பொதுவாக ஒரு பிரபலமான இடத்திற்கு அருகிலயே நாம் வசித்து கொண்டிருந்தால் நாமதான் அந்த பக்கமே போய் இருக்கவே மாட்டோமே. அதனால் நண்பர்கள் ஒவ்வொரு முறையும்  ஜெயராமன் சாப்பாட்டு கடையை பற்றி விசாரிக்கும் போதெல்லாம் நானும் எதோ சொல்லி மழுப்பி விடுவேன்.

எனக்கு அவ்வபோது ஏற்படும் இந்த விசாரிப்புகளுக்கு சரியான ஒரு பதிலை சொல்ல ஜெயராமன் சாப்பாட்டு கடைக்கு ஒரு முறை சென்று சாப்பிட்டு விட்டு வந்து விட வேண்டும் என்று நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்க்கு தகுந்தாற்போல், 28/12/15 அன்று நேரமும் வாய்த்தது. நண்பனின் சகோதரியை புதுச்சேரியில் அவர் படிக்கும் கல்லூரியில் விட்டுவிட்டு வரும் போது சாப்பிட ஆயத்தமாகிவிட்டோம். இதற்காக நான் காலை உணவையே அளவாகத்தான் எடுத்துக்கொண்டேன்.

முதலில் காரைக்காலிருந்து புதுச்சேரி சென்று சகோதரியை விட்டுவிட்டு மறுபடி  புதுச்சேரியிலிருந்து எங்கள் பயணத்தை எனது சொந்த ஊரான காரைக்கால் நோக்கி துவங்கினோம். புதுச்சேரியிலிருந்து வரும்போது  காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் வழியில் சீர்காழிக்கு அருகில்தான் இருக்கிறது இந்த சிற்றூர், புத்தூர். ஜெயராமன் சாப்பாட்டு கடை பழைய கீற்று கொட்டை போல் இருக்கும், அதனால் புதுசேரியில் இருந்து வரும்போது கொஞ்சம் கவனமாக சாலையின் வலது புறம் பார்த்துக் கொண்டே வரவேண்டும். இல்லையெனில் கடையை தாண்டி செல்ல நேரிடலாம்.

puthur jeyaraman 1

எங்களுக்கு இந்த கடை இருக்கும் இடம், ஊர் இவையெல்லாம் நன்கு பழக்கம் என்பதால், சாப்பிடுவதற்காக ஜெயராமன் கடைக்கு எதிரே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த பல மாருதி, இன்னோவா கார்களுகளுக்கிடையே எங்கள் காரையும் நுழைத்து கொண்டோம்.

puthur jeyaraman 2

முதல் முறையாக இந்த கடைக்கு சாப்பிட செல்வதாலும், எனது நீண்ட நாள் விருப்பம் நிறைவேற போவதாலும் மனதிற்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. இந்த கடையில் சாப்பிட மட்டும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். அதோடு ஒருவர் சாப்பிட்டு விட்டு கை கழுவ எழுந்தவுடன் அடுத்தவர் அமர ரெடியாக காத்திருப்பார் என்றெல்லாம்  இந்த கடையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும் எனக்கு அதுபோன்ற அனுபவம் ஏதும் ஏற்படவில்லை.

கடையின் உள்ளே நுழையும்  போதே வாசலில் இரண்டு பெரிய தோசை கல்லில் இறால், கை பக்குவமாக அரைத்த மசாலாக்களோடு இணைந்து வெங்காயம் தக்காளி சேர்த்து வறுக்கப்படுகிறது.

puthur jeyaraman 3

இந்த வாசனைனையே வருக வருகவென சாப்பிட தூண்டியது. கடையில் வேலை செய்யும் அனைவரும் வாடிக்கையாளர்களிடம் மிக அன்பாக பழகுகின்றனர். ஏதோ நம் வீட்டுக்கு வந்த விருந்தாளியை கவனிப்பது போல், வாங்க! வாங்க! நீங்க எத்தனை பேர் என்று ஒருவர் விசாரிக்கிறார். நாம் சொன்னவுடன் அதற்கேற்றார் போல் இடம் காலியானவுடன் உங்களை அமரவைத்து பரிமாற துவங்குகின்றனர். அதோடு ஒருவர் ரசம் போடுங்கள் என்று சொல்லும்போது, என்ன அதுக்குள்ள ரசத்துக்கு போய்டிங்க.. இன்னும் இறால் குழம்பு கொஞ்சம் போட்டு சாப்பிடுங்க என்று அன்பான குரலில் பரிமாறுபவர்களின் குரல் ஓங்குகிறது. அதற்காகவே திரும்ப ஒருமுறை சாப்பிடலாம்.

டேபிளில் அமர்ந்தோம், முதலில் வேகமாக ஒரு இளைஞர் ஓடிவந்து, நாளிதழ் ஒன்றை சாப்பிடும் டேபிள் மேல் விரிக்கிறார். பின் அதன் மேல் பசுமையான வாழை இலை. அதன் பின், கீரை , வெங்காய தயிர் பச்சடி வைக்கிறார்கள். அதன் பின் சாதம் வைக்கிறார்கள்.

கொஞ்சமும் வஞ்சம் வைக்காமல் மீன் குழம்பு, இறால் குழம்பு என்று இரண்டு  பெரிய கிண்ணத்தில் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே வைக்கிறார்கள். சாதமும் தாராளமாக உங்களை கேட்காமலயே பரிமாறப்படுகிறது. இந்த கடையில் நான் வியந்த ஒரு காரியம் என்னவென்றால், மறு சாதம் பரிமாறும் போது, அன்னவெட்டியால் ஒரு விசுறு, அழகாக விசுருகிறார்கள், மற்ற கடைகளை போல் ஒரேயடியாக அளவிற்கு அதிகமாக வைத்து, சாப்பிட முடியாமல் திணறடிப்பது இல்லை.

அதோடு உங்கள் இலை காலியான உடன் அவரசமாக எங்கிருந்தோ வரும், பரிமாறுபவர் ஒருவர் நம்மை கேட்காமலயே சாதத்தை வைத்துவிட்டு செல்கிறார்.

மெனு கார்டு

ரொம்ப சிம்பிள் –

1. சாதம்- வெங்காய தயிர் பச்சடி, கீரை (இது மட்டும் Rs: 110/-)

2. மீன் குழம்பு, இறால் குழம்பு, ரசம், மோர், கெட்டி தயிர் (தனியே வாங்க வேண்டும் என்று நினைக்கிறன், நான் ரசத்தோடு நிறுத்திக்கொண்டேன்! முடியலப்பா……  )

3. ஸ்பெஷல் இறால் வறுவல், சிக்கன் வறுவல், மீன் வறுவல்.

சாதம் வைத்தவுடனையே, என்ன சைடு டிஷ் வேண்டும் என்று சொல்லி விடவேண்டும். அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளாமல் ஆர்டர் செய்தவுடனேயே கிடைத்து விடுகிறது. நானும் என்னோடு வந்த என் நண்பரும் 1 ப்ளேட் இறால் மற்றும் 2 மீன் வாங்கிக்கொண்டோம்.

குழம்புகளின் சுவையை பற்றி வெளியூர்காரர்களுக்கு சொல்ல வேண்டுமே! இது வரை சொல்லாமல் மறந்து விட்டேன். ஒரே வார்த்தையில் செம டேஸ்ட்.. இவர்கள் மசாலாக்கள் எதுவும் கடையில் வாங்குவது இல்லையாம். எல்லாமே சொந்தமாக அரைப்பதுதானாம். புளிக்காத கெட்டி தயிர் பரிமாறப்படுகிறது.

வழக்கமாக எங்கள் வீட்டில் இது போலவே குழம்பு வைப்பதாலும், பக்கத்திலயே கடல் இருப்பதால் இறால், மீன், நண்டு என்று கடல் உணவு பொருட்களை ப்ரெஷாக சிறு வயதில் இருந்தே அதிகம் சாப்பிட்டு பழகியதாலும் எனக்கும் என் நண்பருக்கும் மற்றவர்களை விட சுவை அனுபவத்தில் வியப்பு இல்லை. ஆனால் இங்கு சாப்பிடும் போது மகிழ்ந்தோம். வெளியூர்களில் இருந்து வரும் அனைவருக்கும் நிச்சயம் இந்த கடை ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என்பதில் மட்டும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கடைசியாக நானும் என் நண்பரும் கொஞ்சம் அளவுவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு விட்டு, வீட்டிற்க்கும் ஒரு மீன் வறுவல் வாங்கிக்கொண்டு ரூ. 600 பில் கொடுத்துவிட்டு வந்தோம்.

காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளார் ( கோயிலுக்கு சென்று திரும்பும் போது  விருப்பம் இருந்தால் இங்கு சாப்பிடலாம் ) செல்பவர்கள், சீர்காழி நெருங்கும் போதே புத்தூர் ஜெயராம் கடை பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள். அல்லது கூகிள் மேப்பில் Puthur Jayaram, Chennai – Nagapattinam Highway, Puthur, Tamil Nadu, India என்று தேடினாலும் கிடைக்கிறது.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள். சொல்கிறேன் +918189919372.

தினசரி இது போன்ற சுவையான பதிவுகள் பெற என் இலவச மின்னஞ்சல் சேவையை ஆக்டிவேட் செய்துக்கொள்ளுங்கள்.      
The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.